சனி, 11 ஏப்ரல், 2009

நம்ம பேட்டை

நம்ம பேட்டை

உலகிலுள்ள லட்சக்கனக்கான நகரங்களில் சில ஆயிரம் நகரங்கள் (சில நூறு?!) மட்டும் பெயரும் புகழும் அடைந்து செல்வம் கொழிக்கும் முக்கிய மாநகரங்களாக உருவெடுப்பதின் காரணம் - அவை எதாவது ஒரு துறையில் முழு கவனம் செலுத்தி அதனை சார்ந்து செயல்படுவதே ஆகும்.

கார் தயாரிப்பினால் புகழைடைந்த நகரம் அமெரிக்காவின் டெட்ராய்ட்.
சிலிகான் சில்லுகளினால் வளமடைந்த நகரம் தைவானின் தைபேய்.
சூதாட்டதம் மற்றும் கேளிக்கை விளையாட்டினால் பெயர் பெற்ற நகரம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ்.
மென்பொருள் துறையினால் மேன்மையடைந்த நகரம் இந்தியாவின் பெங்களூரு.

இந்த வரிசையில் (சற்றே வித்யாசமாக) வீடுகளை வாடகைக்கு விட்டு சீரும் சிறப்பும் பெற்ற நகரத்தை உங்களுக்கு தெரியுமா?
இந்த நகரத்தை பற்றி தெரியாமல் இப்படியும் ஒரு நகரமா என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, விடை காண்பதற்க்கான துறுப்புச்சீட்டு இதோ - இந்த நகரத்தில் "மதீனா" என்ற வார்த்தையை தன் பெயரில் கொண்ட நூற்றுக்கணக்கான அங்காடிகளும், கடைகளும் இருக்கின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் பல தடவை பலப்பரிட்சை செய்த புகழ் பெற்ற கிரிகெட் மைதானம் இந்த நகரத்தில் உள்ளது. இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு, அட போங்க! நானே சொல்லிவிடுகின்றேன். இந்த நகரம் ஷார்ஜா.

ஷார்ஜா ஐக்கிய அரபு அமீரகத்தின் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) எழு மாகானத்தில் மூன்றாவது பெரிய மாகானம். அமீரகத்தின் தலை நகரமான அபு தாபி போல் எண்னை வளம் கிடையாது, தன் அண்டை நகரமான (அரபு உலகத்தின் வனிக தலை நகரமாக விளங்கும்) துபாய் போன்ற மாயாஜாலங்கள் ஷார்ஜாவில் கிடையாது. ஷார்ஜாவில் சிறிது தொழில்சாலைகள் உள்ள போதிலும், என் பார்வையில் ஷார்ஜாவில் எங்கும் நிறைந்திருப்பவை வீடுகள், வீடுகள் மேலும் வீடுகள். சொல்லப்போனால் ஷார்ஜா, பரப்பளவில் துபாயின் மூன்றில் ஓர் பங்குதான். ஆனால் துபாயில் பணியாற்றும் மக்களில் பத்தில் ஆறு பேர் வசிக்குமிடம் ஷார்ஜா. ஷார்ஜாவின் மக்கள்தொகை துபாயைவிடவும் அதிகமாக இருந்தாலும் இருக்கலாம், வியப்பில்லை. இந்த ஜனத்தொகையால் ஷார்ஜாவில் எங்கேயும் எப்பொழுதும் கூட்டம், நெருக்கடி. இந்தக்கூட்டத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள், ஆதிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிருந்து வந்தவர்கள். இதில் படிக்கு பாதிப்பேர் பிழைப்புகாக இந்த வளைகூடா நாட்டில் வளைந்துக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள். சமீபக்காலத்தில் துபாய் தன்னை மொத்த வளைகூடாவின் வனிக தலைநகரமாக உருவாக்கிக்கொன்டுள்ளது. மேற்க்கத்திய நாட்டினறே வியக்கும் வகையில், கடலில் உருவக்கப்பட்ட பனை தீவுகள், உலகின் உயரமான கட்டிடம், அதி நவீன விமான நிலையம், ஏழு நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு வீடுகள், பாலைவனத்தில் பனி உலகம் என ஜொலிக்கும் துபாய், தன் ஜொலிப்பிற்கேற்ற கட்டணத்தை வசூல் செய்து விடுகின்றது. ஆக சாமானிய மக்களுக்கு துபாயில் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள போதிலும் அதன் விலைவாசி கட்டுப்படியாகாது. இந்த பிரச்சனைக்கு தீர்வு, ஷார்ஜாவில் வீடு. காலப்போக்கில் வீடுகளை வாடகை விடுவதே ஷார்ஜாவின் பிரதான தொழிலாகிவிட்டது. ஷார்ஜாவில் சிறியதும் பெரியதுமாக, நெட்டையும் குட்டையுமாக ஆயிரம் ஆயிரம் வீடுகள் உண்டு. பத்திற்கும் மேற்ப்பட்ட அறைகள் கொண்ட சொகுசு மாளிகை முதல் ஒருவர் மட்டுமே தங்கக்கூடிய சிறிய அளவு கொண்ட அறை வரை அனைத்தும் ஷார்ஜாவில் கிடைக்கும். வீடுகளுக்கு அடுத்தபடியாக ஷார்ஜாவில் நாம் பார்ப்பது பல் பொருள் அங்காடிகள். அநேகமாக ஒவ்வொரு அடுக்கு மாடி குடியிருப்பின் தரை தளத்திலும் ஒரு பல் பொருள் அங்காடி இருக்கும். அதிலும் முக்கால் வாசி அங்காடிகள் தங்கள் பெயரில் "மதீனா" வை கொண்டிருக்கும். குடியிருப்புகள் சார்ந்த உப தொழில்கலான உணவகம், அழகு புனையகம், சலவையகம், மருந்தகம் ஆகியவையும் நிறைய உண்டு.
ஷார்ஜாவில் நான் கிட்ட தட்ட பத்து மாதங்கள் வசித்துள்ளேன். அவற்றிலிருந்து சில குறிப்புகள்:

நான் ஷார்ஜாவில் வசித்த பத்து மாதங்களில் முதல் ஒன்றரை மாதங்கள் தனியாக வசித்து வந்தேன். ஊருக்கு புதுசு என்பதால் கையில் குறைந்த அளவே பணமிருந்தது. அதே சமயம் தனியாக வசித்த படியால் நேரமோ நிறைய இருந்தது. ஆகவே ஷார்ஜாவின் கோடை வெய்யிலை வீணடிக்காமல் மொத்த ஊரையும் பொடி நடையாகவே சுற்றி வந்தேன். போதாதக்குறைக்கு தமிழ் / இந்திய உனவகங்கள் நான் இருந்த இடத்திலிருந்து குறைந்தது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தன, ஆக தினமும் இரண்டு வேளையாவது நடை யாத்திரை தான். இதன் மூலம் ஷார்ஜாவின் மூலை முடுக்குகள் அனைத்தும் நன்று பரிச்சயமாயின. நடக்கையிலே களைப்பேரினால் எதாவது ஒரு அங்காடியுள் புகுந்து விடுவேன். அங்கே ஒரு ஐந்து நிமிடம் அதன் குளிர் சாதன வசதியில் நனைந்துவிட்டு, பழரசத்தினால் தொண்டையையும் நனைத்துவிட்டு மறுபடியும் நடையினை தொடருவேன். இந்த வழியில் எனக்கு ஷார்ஜாவின் உன்மையான நிறம், குணம், மணம் நங்கு பரிச்சயமாயிற்று, பிடித்தும் போயிற்று.

ஷார்ஜாவில் மூன்று களப்புகள் (லகூன்) உள்ளன. இவற்றில் பெரியதான காலித் லாகூனின் வெளிப்புரம் ஷார்ஜாவின் காலித் துறைமுகம் அமைந்துள்ளது. லாகூனின் மற்றொரு புரம் கார்னிஷ் சாலை. கார்னிஷ் சாலை ஷார்ஜாவில் என்னை மிகவும் கவர்ந்த இடம். இந்த தெருவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில்தான் என் ஷார்ஜா வாழ்கை ஆரம்பமாயிற்று. அறைநூற்றாண்டுக்கும் முந்தைய ஷார்ஜாவின் பத்திரபடுத்தப்பட்ட மிச்சம் மீதியை இந்த தெருவில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள் பாதுகாக்கின்றன. ஒரே இடத்தில் சுமார் பத்து அருங்காட்சியகங்கள். இந்த பகுதிக்கு ஒரு நீளமான சுற்றுச்சுவர். ஈரானிய சந்தை, பன்பாடு மற்றும் கலை பொருட்களின் சந்தை, ஷார்ஜா கோட்டை ஆகிய அனைத்தும் இந்த சுற்றுச்சுவருக்குள் அடங்கும். இந்த சுவர் மற்றும் இங்குள்ள கட்டிடங்கள் கடல் கிளிஞ்சள்கல் / கடல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விடத்தின் அருகே ஒரு மிக பெரிய ஓவிய கண்காட்சியும் அமைந்துள்ளது. காலித் லாகூனின் கரையாக அமைந்துள்ள கார்னிஷ் தெரு ஒரு கடல் வர்த்தக தளமும் கூட. இங்கே தினமும் நூற்றுக்கணக்கான மரக்கலங்கல் (அரபு மொழியில் 'தொ' என்று பெயர்) ஷார்ஜாவிர்க்கும் ஈரனுக்குமிடையே சரக்குகளை பரிமாரிகொண்டிருக்கின்றன. சரக்கு போக்குவரத்தால் இந்த இடம் எப்பொழுதுமே நில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும். மீன்பிடி படகுகளும் இங்கே நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியிலிருந்து பிழைப்புகாக வந்த மீனவர்களை இங்கே வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய மீனவர்களுடன் கானலாம். லகூனின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல "அப்ரா" எனப்படும் சிறு படகுகளும் உண்டு. ஒரு திராமிர்க்கு ("திராம்" அமீரகத்தின் பணம்) இந்த அப்ராவில் உல்லாச பயனம் செல்லலாம். காலித் துறைமுகத்தின் நுழைவாயிலின் அருகே 'ஸேவா'வின் பிரதான தொழில்சாலை உள்ளது. (ஆங்கிலத்தில் “ஸேவா” என்பதன் விரிவாக்கம் – ‘ஷார்ஜா எலெக்ட்ரிசிடி அண்ட் வாட்டர் அதாரிட்டி’). இங்கேதான் (தமிழக அரசியலில் வாக்குறுதிகளில் முக்கிய இடம் பெற்று இன்றளவும் கானல் நீராகவே உள்ள) கடல்நீர் குடினீராக்கப்பட்டு ஷார்ஜாவின் மூலை முடுக்குகள் அனைத்திற்க்கும் வினியோகம் செய்யப்படுகின்றது. வீடுகளில் பயன்படுத்தபட்ட தண்ணீர் மருசுழட்சி முறையால் சுத்திகரிக்கப்பட்டு ஷார்ஜா முழுவதும் பூங்காக்களையும் புல்வெளிகளையும் வளர்க்க உதவுகின்றது. பாலைவனப்பிரதேமான ஷார்ஜாவில் நம் இந்திய நகரங்களில் உள்ளதை விட அதிக அளவில் பூங்காக்களும், தோட்டங்களும் உண்டு. அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் மிக நல்ல முறையில் பராமரிக்கவும் பாதுகாக்கவும் படுகின்றன. காலித் லாகூனின் மற்றொரு பகுதியில் உள்ளது புஹைரா கார்னிஷ். இந்த இடத்தில் லாகூனை சுற்றி அமைந்துள்ள சாலை மிகவும் வசீகரமாக இருக்கும். வனிக வளாகங்கள், வங்கிகள், திறையரங்குகள், விடுதிகள், பூங்காக்கள், அண்னாந்து பார்க்கவைக்கும் அடுக்கு மாடி வீடுகள் ஆகியவை இங்கே அமைந்துள்ளது. பத்து மாடி உயரத்திற்க்கு விண்ணில் பாயும் செயற்கை நீர்வீழ்ச்சியும், இருபது மாடி உயரத்திற்க்கு நம்மை கொண்டு செல்லும் 'எமிரேட்ஸ் ஐ' எனும் ராட்டினமும் புஹைரா கார்னிஷில் அமைந்துள்ளன. புஹைரா கார்னிஷில் எமிரேட்ஸ் ஐ உள்ள பகுதியான கனத் அல் கஸ்பாவில் பகல் கொள்ளையடிக்கும் பன்னாட்டு உனவகங்கள் உண்டு. காலித் மற்றும் அல் கான் லாகூன்களை இனைக்கும் சிரு கால்வாய் உள்ள பகுதிதான் கனத் அல் கஸ்பா. இங்கே உல்லாச படகு சவாரியும், குழந்தைகளுக்கான விளையாடு அம்சங்களும் நிறைய உண்டு.

கலித் லாகூனின் மைய பகுதியில் ஷார்ஜா பாலத்தின் அருகே தீவுப்பூங்கா அமைந்துள்ளது. அல் ஜசீரா பூங்கா என்று இதற்குப்பெயர் (அரபு மொழியில் ஜசீரா என்றால் தீவு என்று பொருள்). இங்கே இது பாலைவனம்தானா என்று நாம் சந்தேகப்படும் அளவிற்க்கு தோட்டங்களும் ஒங்கி வளர்ந்த மரங்களும் நம் கண்ணைக்கவரும். பூங்காவை சுற்றிவரும் சிக்கு புக்கு ரயிலும், குழந்தைகள் விளையாடுவதற்கான ஏராளமான விளையாட்டு அம்சங்களும் உண்டு. இந்த பூங்காவிலிருந்து நாம் புஹைரா கார்னிஷின் வசீகரிக்கும் அழகை முழுவதுமாக கண்டு களிக்கலாம். மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நூற்றுக்கனக்கான குடும்பங்கள் இங்கே தஞ்சமடையும். அராபியர்கள் தங்கள் குடும்பம் சகிதமாக இங்கே வந்து பொழுதைக்கழிப்பது நாம் கண்டு களிக்க வேண்டிய ஒரு காட்சி. சகல வசதி கொண்ட ஜீப்புகளில் தங்கள் பெ.......ரிய குடும்பத்துடன் வரும் அராபியர்கள், தங்கள் கூடவே ஒரு குடும்பத்தை நடத்த வேண்டிய அளவு அனைத்து பொருட்களையும் கொண்டுவருவார்கள். இரண்டு அல்லது மூன்று நாற்காலிகள், பாய்கள், பெரிய கூடை நிறைய பல விதமான உனவுப்பொருட்கள், மாமிச உனவு சமைப்பதர்க்கான தணல் அடுப்பு, விளையாட்டு சாமான்கள் இன்னும் சில பல இத்யாதிகளுடன் ஆனந்தமாய் பூங்காவில் பொழுதைக்கழிப்பார்கள்.

ஷார்ஜா பாலத்தின் மிக அருகே உள்ளது பேருந்து நிலையம். நாட்டின் உள்ள அனைத்து மூலைகளுக்கும் குளு குளு சொகுசுப்பேருந்துகள் குறைந்த கட்டனத்தில் நம்மை அழைத்து செல்லும். நேரம் தவறாமல் பயனிக்கும் இந்த பேருந்துகளில் ஏற நிலையத்திலிலுள்ள அலுவலகத்திலே பயனச்சீட்டு வாங்க வேண்டும். நடத்துனர் கிடையாது. ஷார்ஜா துபாய் இடையே செல்லும் மாடிப்பேருந்தின் பயனம் மிகவும் நன்றாக இருக்கும். ஷார்ஜா பேருந்தின் நிலையத்தின் மிக அருகே உள்ளது மைய பூங்கா. இதனை இதிஹாட் சதுக்கம் என்றும் அழைப்பர். நமது சேப்பக்கம் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றளவை போன்று மூன்று மடங்கு பெரியதாக, பச்சை புல் போர்வை உடுத்தி ரம்மியமாக இருக்கும் இந்த சதுக்கம். உன்மையில் இந்த பிரமாண்ட பூங்கா பல சிறிய போக்குவரத்து பூங்காக்களின் கூட்டமைப்பில் உருவானது. இந்த இடம் உடற்பயிற்ச்சி செய்வோருக்கு மிகவும் அபிமானமான இடம். அதிகாலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இச்சதுக்கத்தில் யோகா போன்ற வகுப்புகளும் நடைபெறுவது வழக்கம். பண்டிகை மற்றும் விடுமுறைகளின்போது குழந்தைகளுக்கான உற்சாக விளையாட்டு களமாக மாறும் இந்த பூங்காவில் பொருட்காட்சியில் உள்ளதுபோல் சிறு சிறு விளையாட்டு உலகங்களும் அமைக்கப்படும். இந்த சதுக்கத்தில் உள்ள சவுதி மசூதி எனக்குத்தெரிந்தவரையில் ஷார்ஜாவிலேயே உள்ள மசூதிகளில் மிகப்பெரியது. இதன் எதிர்பக்கம் உள்ளது "ஷார்ஜா கோல்டு சூக்" (சூக் என்றால் மார்கெட்). ஒன்றன் பக்கம் ஒன்றாக இரண்டு பெரிய கட்டிடங்கள். இதனை முதல் முறை பார்ப்போர் இது ஒரு அதி நவீன ரயில் நிலையம் என்றே நினைத்துக்கொள்வர். இதன் உள்ளே நூற்றுக்கும் அதிகமான கடைகள், அதிலும் பெரும்பாலும் நகைகடைகள். ஷார்ஜாவிற்கு முதல் முறை வருவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமிது. இந்த மைய பூங்காவில் இன்னொரு விசேஷமுண்டு. பிழப்பைத்தேடி இந்த நாடிற்க்கு வந்து வேலை கிடைக்கும் வரை அனைத்து விதத்திலும் திண்டாடும் நிறைய பேருக்கு இந்த சதுக்கம்தான் வீடு. இரவு தன் பெட்டியை தலையனையாக்கிக்கொண்டு, புல் தரை மெத்தையில் கவலைகளை கட்டிக்கொண்டு தூங்குவோர் பலபேர் இங்குண்டு. அதிகாலையில் இந்த பூங்காவிலுள்ள இலவச கழிப்பிடத்தில் கூட்டம் அலைமோதும். பகல் பொழுதில் இரை தேடும் பறவை போல் வேலை தேடும் இவர்கள் இரவில் சரனடைவது இந்த சதுக்கத்தில்தான்.

இந்த பூங்காவிற்க்கும், பேருந்து நிலையத்திற்க்கும் மிக அருகில் உள்ளது ஷார்ஜாவின் செல்ல பிரானிகளின் சந்தை. ஒரு சிறு மிருக காட்சி சாலை அளவிற்க்கு இருக்கும் இந்த சந்தையில் ஈரானிலிருந்து வந்த ஆடு, மாடு, கழுதைகள் நிறைய கிடைக்கும். செல்ல பிரானிகளை விற்பனை செய்யும் கடைகள் உள்ள ஒரு பெரிய அரங்கமே உள்ளது. நாய், பூனை, வண்ன மீன்கள், கிளி, காதல் பறவைகள் போன்ற மாமூலான செல்ல பிரானிகள் யானை விலைக்கு இங்கே கிடைக்கும். இதை தவிர ஆமை, பஞ்சவர்னக்கிளி, ஆப்ரிக்க கிளி, நெருப்புக்கோழிகளும் இங்கே கிடைக்கும். ஒரு பஞ்சவர்னக்கிளியின் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் திராம்கள் வரை இருக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றினால் தலையின் மேல் நட்சத்திரம் சுழலும். இவை அனைத்தையும் விட மேலாக அராபியர்களுக்கு பிடித்தமான, அமீரகத்தின் சின்னமாக விளங்கும் "ஃபால்கன்" எனப்படும் பருந்து / கழுகு இங்கே விற்பனைக்கு வீற்றிருக்கும். இந்த கழுகு பறக்கும் உயரத்திலே இதன் விலையும் பறக்கும். தோலினால் ஆன அழகான கிரீடம் அனிந்து அந்த கிரீடத்தாலேயே கண்கள் மூடப்பட்டு குருட்டு ராஜாவாக கடைகளில் அமர்ந்திருக்கும் இந்த கழுகுகளை பார்க்கும்பொழுது சிறிது பயம் உண்டானாலும் பரிதாபமாக இருக்கும். எதையும் வாங்காவிட்டாலும், இந்த சந்தையில் சுற்றி வந்து இரண்டு மணிநேர பொழுதை நன்றாக கழிக்கலாம். இந்த மைய பூங்காவின் பக்கவாடில் அமைந்துள்ள பகுதி ரோலா என்று அழைக்கப்படுகின்றது. நமக்கு சிறிது முன்னால் பரிச்சயமான ஷார்ஜாவின் கோட்டை, மதில், மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ள பகுதியும் ரோலாவிலே அடங்கும். சென்னைக்கு ஒரு தி நகர் உள்ளது போல் ஷார்ஜாவிற்க்கு ரோலா. இங்கிருக்கும் பல நூறு கடைகளில் கிடைக்காத பொருளே கிடையாது. ஒரு திராம், இரண்டு திராமிர்க்கு நினைவுப்பொருட்கள், பத்து திராமிற்க்கு பதினைந்து புது படங்களை உள்ளடக்கிய டி.வீ.டி, பல விதமான துணிமனிகள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், நகைகள் என்று அனைத்தும் கிடைக்கும். ஷார்ஜாவில் தமிழ் படம் ஓடும் ஒரே திறையரங்கு இருப்பதும் ரோலாவில்தான். ரோலாவின் மத்தியில் உள்ள ரோலா சதுக்கம் எப்பொழுதும் ஜன சந்தடி மிகுந்த முக்கிய இடமாகும். ரோலாவில் சுற்றி வந்தால் பொழுது போவதே தெரியாது. ரோலாதான் ஷார்ஜாவில் முதலில் உருவான பகுதி. இன்றளவும் ரோலா ஷார்ஜாவின் மிக முக்கிய பகுதியாக விளங்குகிறது.

ஷார்ஜா அரபு உலகத்தின் கலை மற்றும் பன்பாட்டு தலை நகராக விளங்குகின்ரது. இஸ்லாமிய பன்பாட்டினை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஷார்ஜாவில் மது, மாது போன்ற வஸ்துக்களுக்கு தடை. ஷார்ஜாவின் அண்டை நகர்களான துபாய் மற்றும் அஜ்மான் இந்த விஷயத்தில் ஷார்ஜாவிற்க்கு நேர் எதிர். இஸ்லாத்தை போற்றுவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஷார்ஜாவின் ஆட்சியாளர்களான அல் காசிமி பரம்பரை. ஷார்ஜாவின் தற்பொழுதைய ஆட்சியாளர் ஷேக் அல் காசிமி. தலைமுறை தலைமுறையாக ஷார்ஜவை ஆளும் அல் காசிமி குடும்பம் ஷார்ஜாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது. அதே சமயம் (நம்மூர் அரசியல் வாதிகள் கவனத்திற்க்கு) இவர்களால் மக்களுக்கு இம்மியளவும் தொந்தரவு கிடையாது. அமீரகத்தின் தேசிய தினத்தன்று இந்த நாட்டில் வாழும் பன்னாட்டு மக்களும் ஆட்சியாளர்களையும், அவர்களது ஆட்சியையும் பாராட்டுவது சிறந்த சான்று. இங்கே காவல்துறை பற்றியும் சிறிது சொல்லியாக வேண்டும். மிடுக்கான சீருடையனிந்து உயர் ரக ஜீப்புகளிலும், பைக்குகளிலும் வலம் வரும் இவர்கள் பன்னாட்டு மக்களையும் சீராக கையாள்வர். போக்குவரத்தை சீர்படுத்துவதிலிருந்து, சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பது வரை இவர்கள் கடமையில் நேர்மையையும், நேர்த்தியையும் கானலாம்.

ஷார்ஜாவிற்கு இன்னொரு பெருமையும் உண்டு. அரபு உலகத்தின் முதல் விமான நிலையம் அமைக்கப்பட்டது ஷார்ஜாவில்தான். எதிஹாட் சதுக்கத்தின் மிக அருகில் உள்ள பகுதி அல் மஹாட்டா. இங்கேதான் அரபு உலகத்தின் முதல் விமான நிலையம் உருவாக்கப்பட்டது. அதுவும் லண்டனிலிருந்து இந்தியா வரும் விமானங்கள் நடுவில் ஓய்வெடுக்கவும், எரிபொருள் நிரப்பவும் அமைக்கப்பட்டது. தற்பொழுது ஒரு விமான அருங்காட்சியமாக காட்சியளிக்கும் இந்த நிலையம் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்கே சில நிஜ விமானங்களையும் அதன் பாகங்களையும் மாதிரியாக கானலாம். கூடவே ஒலி ஒளி அரங்கமும் உண்டு. இந்த விமான நிலையம் இயங்கிகொண்டிருந்தப்பொழுது இதன் ஓடுதளமாக இருந்த பாதை தற்பொழுது ஷார்ஜாவின் முக்கிய சாலைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அப்துல் அசீஸ் தெரு என்பது இதன் இன்றைய பெயர். தரையிரங்கியபின் விமானங்கள் வந்து நிற்குமிடமின்று அல் மஹாட்டா பூங்கா ஆகிவிட்டது.


ஷார்ஜாவின் இன்னொரு முக்கியமான சாலை கிங் ஃபைசல் சாலை. சென்னைக்கு ஒரு அண்ணா சாலை என்றால், ஷார்ஜாவிற்கு ஒரு கிங் ஃபைசல் சாலை. வங்கிகள், வனிக வளாகங்கள், உனவகங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் இங்கே உண்டு. சீரான போக்குவரத்து விதிகள், அனைத்து சந்து பொந்துகளிலும் நடைபதை மற்றும் கார்களை நிருத்த இட வசதி என இருந்தும் ஷார்ஜாவின் மிகுந்த ஜனத்தொகையால் போக்குவரத்து நெரிசல், இடமின்மை போராட்டம்தான். நடுநிசிக்கு மேல் தெருக்களின் முக்கால்வாசி பரப்பிற்க்கு கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தற்பொழுது கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் முதல் ஐந்து அல்லது ஆறு தளங்கள் கார்களை நிருத்தவே ஒதுக்கப்படுகின்றது. இத்தனை கார்களும் பகல் பொழுதில் ஒரு நகரத்தில் ஓடினால் நினைத்துப்பாருங்கள்!. நாம் சற்று முன் பார்ததுப்போல் ஷார்ஜாவின் படிக்கு பாதிக்கும் அதிகமான கூட்டம் வேலை செய்வதோ துபாயில். அதிகாலை ஐந்தரை மணியிலிருந்து தொடங்கி பத்து மனி வரை ஷார்ஜாவிலிருந்து துபாய் செல்லும் அனைத்து சாலைகளிலும் சிறிதளவும் சாலையே தெரியாத வன்னம் கார்கள் அனிவகுத்து நிற்க்கும். இந்த ஊர்வலத்தில் முப்பதே கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துபாய் செல்ல மூன்று மணிநேரம் பிடிக்கும். உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் வரிசையில் முதல் பத்து இடத்தில் மேற்கண்ட சாலைகள் நிச்சயம் இடம் பிடிக்கும். இந்த சாலைகளில் செல்வோர் தங்கள் ஒப்பனை, சிகையலங்காரம், சிற்றுண்டி , போன்ற அனைத்து காலை வேலைகளையும் (நாளிதழ் படிப்பது உட்பட) பார்ப்பது கார்களில்தான். என்ன தினமும் நெரிசலில் எண்னற்ற லிட்டர் அளவிற்க்கு பெட்ரோல் எரிக்கப்படும். போகட்டும், அதான் இங்கே பெட்ரோல் மிகவும் மலிவாக கிடைக்கின்றதே. ஒரு வேடிக்கை என்னவென்றால் எதிர்பக்கம் துபாயிலிருந்து ஷார்ஜா வரும் சாலை காலியாக இருக்கும். மாலை வேளையில் நிலைமை தலை கீழ். துபாயிலிருந்து ஷார்ஜா வர மிகுந்த நெருக்கடி, ஷார்ஜாவிலிருந்து துபாய்வர சாலைகளோ காலி. இவ்வளவு தொல்லைகள் உள்ள போதிலும் இங்கே கார் இல்லாமல் முடியாது. நினைத்த நேரத்திற்கு டாக்ஸி கிடைக்காது, மீட்டர்ரும் கட்டுபடியாகாது. ஒரே தீர்வு சொந்த கார். தலை வலி போய் திருகு வலி வந்தது போல் சொந்தமாக கார் வங்கினால் சாலைகளில் நெரிசல் மற்றும் காரை நிருத்த இடமில்லாமை. இதை விட ஓட்டுனர் உரிமம் வாங்குவது அப்பப்பா! நம் இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். கடுமையான விதிகள் உள்ளபடியால் சாலைத்தேர்வில் தேருவதற்க்கு இரண்டு அல்லது மூன்று தடவை பிடிக்கும். இவ்வளவு இருந்தும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்க்கு கூட்டம் அலை மோதும்.

நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் வரை குளு குளு என்றிருக்கும் ஷார்ஜாவில் ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை வெயில் வருத்தெடுக்கும். ஐம்பது டிகிரியைத்தாண்டி கொளுத்தும் வெயிலில் சூரியபகவானின் தாண்டவம் உக்கிரமாக இருக்கும். இந்த வெயிலில் தாங்கள் நடக்க வேண்டும் என்றால் ஒரு சின்ன ஆறுதல் இங்கேயுள்ள நெடிய கட்டிடங்கள்தான். ஷார்ஜாவில் அநேகமாக எந்த கட்டிடத்திற்க்கும் சுற்றுச்சுவர் கிடையாது, ஆதலால் அந்த கட்டிடங்களின் இடையேயுள்ள நிழலில் பதுங்கி பதுங்கி நடக்கலாம். ஷார்ஜாவில் அனைத்து பிராதன சாலைகளின் நடுவிலும் பசுமையான தோட்டம் உண்டு. இங்கே பேரிச்சை மரங்கள் நிறைய இருக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பேரிச்சை பூத்து காய்க்க தொடங்கும். பதப்படுத்தபட்ட பேரிச்சை பழங்களையே சாப்பிட்டு பழகிய நமக்கு பேரிச்சை காய்கள் துவர்ப்பான இனிப்போடு மிக நன்றாக இருக்கும். இந்த காய்களை பரிப்பதற்கு அனுமதி கிடையாது! அதனால் என்ன, நித்தமும் பூங்காக்களிலும், சாலைகளிலும் வீற்றிருக்கும் பேரிச்சை மரங்களிலிருந்து காய்கள் சர்வ சாதரனமாக பரித்து சுவைக்கப்படும்.


ஊரின் வெளியே விமான நிலையத்தின் அருகில் ஷார்ஜா தேசிய பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இதற்க்கு சற்று தொலைவிலேயே ஓட்டப்பந்தையம் நடக்கும் மைதானமும் அமைந்துள்ளது, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இங்கே ஓட்டப்பந்தையம் நடப்பது ஒட்டகங்களுக்கு. ஷார்ஜாவில் ஒரு மிகப்பெரிய மீனகம் உண்டு.

ஷார்ஜாவில் எனக்கு பிடித்த விஷயம் இந்த நகரம் புதுமை மற்றும் பழமையின் நேர்த்தியான கலவை. இங்கே மிக பிரமான்ட அங்காடிகளும் உண்டு, அமைதியான அருங்காட்சியகங்களும் உண்டு.

ஷார்ஜாவில் சிறிது காலமே இருந்த பொழுதும் இது நம்ம பேட்டை என்று சொல்லுமளவிற்க்கு ஷார்ஜா எனக்கு நங்கு பழகிவிட்டது. இங்கே வரும் பெரும்பாலானோரின் கருத்தும் இதுதான். இந்தகைய எண்ணம் எழுவதர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நினக்கும் நம் மனப்பான்மை மட்டும் காரணமில்லை. நம்ம பேட்டையின் விசேஷ குனங்களில் ஒன்றான வந்தாரை வாழ வைக்கும் தன்மை முக்கியமான காரணமாகும். என்ன நன்பர்களே நம்ம பேட்டைக்கு வர தயாரா?

**************

வியாழன், 2 ஏப்ரல், 2009

தமிழ் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்

தமிழ் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்

நெடுந்தொடர்கள் (மெகா சீரியல்) தமிழ் தொலைக்காட்சிகளின் ஓர் மறுக்கமுடியாத அங்கமாகிவிட்டபடியால் சிறிது அதை பற்றி பேசுவோம்...


இன்றைய தேதியில், ஒரு நாளைக்கு சுமார் 25 முதல் 30 நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு நலம் பயக்கின்றன. :) தாங்களும் இந்த பொதுச்சேவையில் பங்குபெற வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய வழி முறைகள்:


1. ஒரு மங்களகரமான பெயரை தொடருக்கு முதலில் தேர்வு செய்ய வெண்டும்! (உதாரனம்: குத்துவிளக்கு, குடும்பவிளக்கு). நீச்சலடி சுந்தரி போன்ற பெயர்கள் அறவே எடுபடாது.


2. ஓய்வுபெற்ற ஓரு முன்னாள் சினிமா கதாநாயகியை நமது தொடரின் நாயகியாக்கி அவர் உலகிலுள்ள அனைத்து நற்பண்புகளையும் கொண்டவராக காண்பிக்கவேண்டும்.


3. பல லட்சங்களை கொட்டி, ஸ்ரீரங்கத்திலோ, சிதம்பரத்திலோ தொடருக்கு ஒரு நல்ல அறிமுக பாடல் (டைட்டில் சாங்க்) அமைக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளரின் இசையில் நித்யஸ்ரீ மஹாதேவணோ, பாம்பே ஜெயஸ்ரீயோ இந்த பாடலை கட்டாயமாக பாடவேண்டும்.


4. கதை முக்கியமல்ல (நமது தொடரை பார்க்கும் ஜனங்களே அதை பற்றி கவலை படாத பொழுது, நமக்கு ஏன் அந்த கவலை!). ஆனால் கதை சொல்லும் விதம் மிகவும் முக்கியம். உதாரனம்: ஒரு தெருவில் நமது கதாபாத்திரம் நடந்து வரும் காட்சி என்றால், முதலில் அந்த தெருவை கிழக்கு மேற்க்காகவும் பின்பு வடக்கு தெற்காகவும் காட்டிவிட்டு அடுத்த காட்சியில் அந்த தெருவின் அக்கோடியிலிருந்து வரும் ஒரு ஸ்கூட்டரையோ / ஆட்டொவையோ இக்கோடி வரும்வரை காட்டி விட்டு, விளம்பர இடைவேளை விடவேண்டும். இடைவேளையின் பிறகு, அந்த தெருவில் ஒரு வீட்டை காண்பித்துவிட்டு பின் மெதுவாக நம் கதாபாத்திரம் அந்த தெருவில் நடந்து வருவதை காண்பிக்கவேண்டும். இந்த ஃபார்முலா மூலம் ஒரு பைசா பெராத விஷயத்தை 400 - 500 எபிஸோடுகளுக்கு ஒட்டிவிடலாம்.


5. தயாரிப்பாளரான உங்கள் பெயரை "க்ரீயேடிவ் ஹெட்" என்று அடிக்கோடிட்டு தலைப்பில் போட்டுக்கொள்ள வேண்டும். இதில் தங்கள் குடும்பத்தினர் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளாம்.


6. விளம்பரதாரர் பற்றி அலட்டிகொள்ள வேண்டாம். அவர்கள் தானாக வருவார்கள். முந்தினம் ஒளிபரப்பிய அதே எபிஸொடை மறுபடியும் ஒளிபரப்பினாலும் விளம்பரதாரர்கள் வந்துவிடுவார்கள்.


7. உங்கள் தொடர் நீண்ட காலம் ஓளிபரப்பாகி வெற்றியும் பெறவெண்டுமா? (மேற்கண்ட அனைத்தையும்விட முக்கியம்!) நீங்கள் ஒரு பொழுதும் உங்கள் தொடரை பார்த்துவிடாதீர்கள்.
:)

கல் யானை


கல் யானை

நீங்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோவில்களை கண்டுள்ளீர்களா? விண்ணை முட்டும் கோபுரம், ஒரு ஊரத்தனை பரப்பளவு, அழகிய குளம் அதில் ஆட்டம் போடும் ஆயிரமாயிரம் மீன்கள், பசுமையான தோட்டங்கள், நிம்மதி தரும் சந்நிதியில் உலகெங்கும் நிறைந்திருக்கும் இறையருள், ஆயிரங்கால் மண்டபங்கள், உயிரோட்டமுள்ள சிற்பங்கள், பாகனிடமுள்ள அங்குசத்தின் அதிகாரத்தில் நிற்கும் கோவில் யானை, உட்பிரகாரங்களில் காலை வேளையில் ஊடுருவும் சூரியக்கிரணம், சிந்தையை கவரும் தமிழ் பண், பக்திமிக்க வேத மந்திரங்கள், விபுதி குங்குமதின் தெய்வீக மணம் அல்லது துளசி தீர்த்தத்தின் தேவாம்ருத சுவை, பிரசாத சுவையை மிஞ்சும் மந்தார இலையின் வசீகர மணம், மதில் சுவற்றின் வெடிப்புகளில் வளரும் அரசு மற்றும் ஆலமரக்கன்றுகள், இன்னும் எத்தனையோ கூறி மாளாது!

இவை அனைத்திலும் என்னை வெகுவாக கவர்ந்தது யானைதான். அதுவும் உயிரோடுள்ள கோவில் யானையை விடவும் நான் மிகவும் கவரப்பட்டது கல் யானை சிற்பத்திடந்தான். கவனித்து உள்ளீர்களா, தூணடி சிற்பமாகவும், மண்டப முகப்பிலுள்ள படிகளின் ஓரத்திலும், கொலு மண்டபங்களிலும், பிரகார சுற்று பாதையிலும் கம்பீரமாய் நின்றிருக்கும் கல் யானை சிற்பங்களை?

கல் யானைகள் பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் அதன் நிஜத்தையொட்டி இருப்பதால், மற்றச்சிற்பங்களிடமிருந்து தனித்து உயிரோவியமாய் காட்சியளிக்கும். ஓரடி உயர சிறு கன்றிலிருந்து பத்தடி உயர கம்பீர மத்த கஜங்களாகவும் நின்றிருக்கும். இதில் வசதி என்னவென்றால், நிஜயானை கன்றினருகேயும் செல்ல தயங்கும் வீரமிகுந்த மாந்தர், நாம் குறிப்பிட்ட பத்தடி உயர கல் கஜங்களிடம் தயக்கமில்லாமல் செல்லலாம், கொஞ்சி விளையாடலாம், ஏன் அதை மிரட்டவும் செய்யலாம். அதே சமயம் உயிருள்ள யானைகளிடத்தில் உண்டாகும் பிரமிப்பும், ஆசையும், சிறிது பயமும் நம்மிடையே கல் யானைகளை கானும்பொழுதும் உண்டாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் யானைகள் உள்ள திருக்கோவில்களை காண்பது மிக அரிது. அத்தகைய கோவில்களில் நமக்கு இந்த கல் யானைகளே கை கொடுக்கும். அட, யானை சிற்பம் இல்லாவிட்டலும் ஓர் யானை ஓவியமாவது கோவில்களில் வீற்றிருக்கும். ஏதோ ஓர் வடிவத்திலாவது யானை இல்லாத கோவில் தமிழ் நாட்டில் இருந்தால் சொல்லுங்களேன்!. தமிழ் மரபிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும், வழிபாட்டிலும் மற்றும் எல்லாவற்றிலும் யானைகளுக்கு ஒர் 'கணமான' இடமுண்டு. யானை நம்மிடையேயுள்ள ஒர் மிக முக்கிய பண்பாட்டுச்சின்னம். இதையுனர்ந்துதானோ பண்டைய காலத்தில் மக்கள் கூடும் முக்கிய இடமான கோவில்களில் யானைகளை, வளர்ப்புப்ராணிகளாகவும், ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வளர்த்தனர்.

கல் யானைகளை உற்றுக்கவனித்தால் விசாலமான காதுடைய சாந்தமான அதன் முகமும், கம்பீரமான நீண்ட துதிக்கையும், பிரமாண்டமான உடலும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். காலில் சலங்கை, தந்தங்களில் பூண், பெரிய நெற்றியில் திருநாமம் அல்லது வீபுதி பொட்டு, முதுகின் மேல் பட்டாடை, கழுத்தில் மணி மேலும் சில பல அலங்காரங்களுடன் ஆனந்தமயமாய் காட்சியளிக்கும். அத்தகைய ஆனந்த ஸ்வரூபத்துடன் குதூகலமாய் நின்று கொண்டிருக்கும் யானை தன்னை கான்போரிடமும் தன் குதூகலத்தை பகிந்துக்கொள்ளும். இத்தனை மகிழிச்சி ததும்பும் கல் யானை சிற்பங்கள் அவ்வப்பொழுது உயிர் பெரும் நேரங்களை நீங்கள் கண்டதுண்டா?

யானையை கண்டு பிரமித்து, குதூகலித்து, கண்கள் விரிய அகமகிழ்ந்து சிரிக்காமல் ஒர் குழந்தை இருப்பதுன்டோ? குழந்தை மட்டும் ஏன்? யானையால் ஆட்கொள்ளப்படாத மனிதர்கள்தான் நம்மிடையே உண்டா? காலம் கழியும் போக்கில் யானைகளே உலகில் இல்லாமல் போகலாம். இதன் காரனமாகத்தான் அக்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்காவது நிலைத்திருக்கட்டும் என்று கல் யானை சிற்பங்களை கோவில்களில் செதுக்கி வைத்தார்களோ? ஓர் தொன்மையான கோவில் உங்கள் குல தெய்வத்தின் கோவிலாக இருக்கும் எனில், அக்கோவிலில் ஓர் கல் யானை சிற்பம் உள்ளதென்று வைத்துக்கொள்ளலாம். அதன் படி அந்த கல் யானை உங்கள் குடும்பத்தின் பல தலைமுறைகளை கண்டு இருக்கும். உங்கள் மூதாதையர்கள் தங்கள் சிறு பருவத்தில் ஏரி விளையாடிய அதே யானையின் மீது நீங்கள் ஏரி விளையாடி இருப்பீர்கள். நாளை உங்கள் வம்சத்தில் வரும் அனைத்துப்பிள்ளைகளும் அதனுடன் விளையாடுவார்கள். அப்படி பார்த்தால் வழி வழியாய் உங்களுடன் நட்பு கொண்ட அந்த யானை உங்கள் குடும்பத்தின் ஓர் இனைப்பிரியா அங்கம் ஆகின்றதல்லவா. யானையுடன் விளையாடுவதே ஓர் குதூகலமான அனுபவம்தான். அது நிஜ யானையானாலும் சரி கல் யானையானலும் சரி. யானை யானை தான், அதற்கு ஈடு இனையே கிடையாது.
குழந்தையின் சிரிப்பில் இறைவனை கானலாம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்! புல்லாங்குழலின் இன்ப கீதமும், யாழின் நளின இசையும்தான் இனிது என்பர் தம் குழந்தையின் சிரிப்பொலி கேளாதவர் என்று பொய்யா மொழிப்புலவர் பாடியதுபோல், மழலையின் சிரிப்பு மறையை விடவும் மேன்மையானது. கோவில்களில் குழந்தைகளின் மனம் அதிகம் லயிப்பது யானையிடந்தான்! நிஜ கோவில் யானை இருக்கும் பொழுதும், கல் யானை சிற்பங்களை குழந்தைகள் அதிகம் ரசிக்கின்றனர். காரனம், அவை எப்பொழுதும் இடம் பெயராமல் இருக்கும், அதன் மீது ஏரி விளையாடலாம், கட்டிக்கொள்ளலாம், ஏன் செல்லமாக அதனை அதிகாரமும் செய்யலாம். இவ்வளவு சௌகரியங்கள் உடைய கல் யானை குழந்தைகளுடன் மிக நெருங்கிய நட்புக்கொண்டு விடுகின்றது. சற்று வேறு கோணத்தில் யோசித்தால், ஓர் அதிசய உன்மை புலப்படும். குழந்தையின் சிரிப்பில் இறையை உனரலாம். குழந்தைகள் யானைகளை கண்டால் மெய் மறந்து சிரிக்கும். தற்பொழுது புரிகிறதா? கோவில்களில் யானைகள் வீற்றிருப்பதின் காரனம்!.

சற்று முன்னால் கல் யானை உயிர் பெருவதைப்பற்றி பேசினோம் அல்லவா? அந்த பேச்சை அங்கேயே விட்டு சிறிது தூரம் வந்துவிட்டோம்!. பரவாயில்லை, வாருங்கள் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். ஓர் வகையில் சொன்னால் கல் யானைகள் குழந்தைகளுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை. குழந்தைகள் அதனுடன் விளையாடும் ஒவ்வொரு கனத்திலும் கல் யானைகள் உயிர்த்தெழுகின்றன, தான் படைக்கப்பட்ட பயனை அவை அனுபவிக்கின்றன. அத்தகைய உயிருணர்ச்சியுடன் அவை பரிமாரும் அன்பினை குழந்தைகளும் புரிந்து கொள்கின்றனர். ஓர் ஆயுட்காலம் நீடிக்கும் பந்தமும் உருவாகின்றது. நீர்வீழ்ச்சி கொட்டுமிடத்தில் உள்ள பாறையின் வழுவழுப்பைப்போல அந்த பந்தமும் நாம் வளர வளர நம்முடன் வளர்கின்றது. அடுத்த முறை ஏதாவது ஓர் கோவிலில் கல் யானையை பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும்பொழுது கவனியுங்கள், உங்களிடையே பலமான பினைப்பு ஒன்று வளர்ந்துக்கொண்டிருப்பதை உனர்வீர்கள். அதே நேரத்தில் இந்த பாசப்பினைப்புதான் கால ஒட்டத்தினை வென்று யானைகளை இவ்வுலகிலே நிலைத்திருக்கச்செய்யும்.

"ஆனி" என்று உளமகிழ்ந்து கூப்பிடும் மழலையின் குரல் கேட்டு உயிர்பெரா கல் யானையும் இங்கே உண்டா?

****************