வியாழன், 2 ஏப்ரல், 2009

கல் யானை


கல் யானை

நீங்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோவில்களை கண்டுள்ளீர்களா? விண்ணை முட்டும் கோபுரம், ஒரு ஊரத்தனை பரப்பளவு, அழகிய குளம் அதில் ஆட்டம் போடும் ஆயிரமாயிரம் மீன்கள், பசுமையான தோட்டங்கள், நிம்மதி தரும் சந்நிதியில் உலகெங்கும் நிறைந்திருக்கும் இறையருள், ஆயிரங்கால் மண்டபங்கள், உயிரோட்டமுள்ள சிற்பங்கள், பாகனிடமுள்ள அங்குசத்தின் அதிகாரத்தில் நிற்கும் கோவில் யானை, உட்பிரகாரங்களில் காலை வேளையில் ஊடுருவும் சூரியக்கிரணம், சிந்தையை கவரும் தமிழ் பண், பக்திமிக்க வேத மந்திரங்கள், விபுதி குங்குமதின் தெய்வீக மணம் அல்லது துளசி தீர்த்தத்தின் தேவாம்ருத சுவை, பிரசாத சுவையை மிஞ்சும் மந்தார இலையின் வசீகர மணம், மதில் சுவற்றின் வெடிப்புகளில் வளரும் அரசு மற்றும் ஆலமரக்கன்றுகள், இன்னும் எத்தனையோ கூறி மாளாது!

இவை அனைத்திலும் என்னை வெகுவாக கவர்ந்தது யானைதான். அதுவும் உயிரோடுள்ள கோவில் யானையை விடவும் நான் மிகவும் கவரப்பட்டது கல் யானை சிற்பத்திடந்தான். கவனித்து உள்ளீர்களா, தூணடி சிற்பமாகவும், மண்டப முகப்பிலுள்ள படிகளின் ஓரத்திலும், கொலு மண்டபங்களிலும், பிரகார சுற்று பாதையிலும் கம்பீரமாய் நின்றிருக்கும் கல் யானை சிற்பங்களை?

கல் யானைகள் பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் அதன் நிஜத்தையொட்டி இருப்பதால், மற்றச்சிற்பங்களிடமிருந்து தனித்து உயிரோவியமாய் காட்சியளிக்கும். ஓரடி உயர சிறு கன்றிலிருந்து பத்தடி உயர கம்பீர மத்த கஜங்களாகவும் நின்றிருக்கும். இதில் வசதி என்னவென்றால், நிஜயானை கன்றினருகேயும் செல்ல தயங்கும் வீரமிகுந்த மாந்தர், நாம் குறிப்பிட்ட பத்தடி உயர கல் கஜங்களிடம் தயக்கமில்லாமல் செல்லலாம், கொஞ்சி விளையாடலாம், ஏன் அதை மிரட்டவும் செய்யலாம். அதே சமயம் உயிருள்ள யானைகளிடத்தில் உண்டாகும் பிரமிப்பும், ஆசையும், சிறிது பயமும் நம்மிடையே கல் யானைகளை கானும்பொழுதும் உண்டாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் யானைகள் உள்ள திருக்கோவில்களை காண்பது மிக அரிது. அத்தகைய கோவில்களில் நமக்கு இந்த கல் யானைகளே கை கொடுக்கும். அட, யானை சிற்பம் இல்லாவிட்டலும் ஓர் யானை ஓவியமாவது கோவில்களில் வீற்றிருக்கும். ஏதோ ஓர் வடிவத்திலாவது யானை இல்லாத கோவில் தமிழ் நாட்டில் இருந்தால் சொல்லுங்களேன்!. தமிழ் மரபிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும், வழிபாட்டிலும் மற்றும் எல்லாவற்றிலும் யானைகளுக்கு ஒர் 'கணமான' இடமுண்டு. யானை நம்மிடையேயுள்ள ஒர் மிக முக்கிய பண்பாட்டுச்சின்னம். இதையுனர்ந்துதானோ பண்டைய காலத்தில் மக்கள் கூடும் முக்கிய இடமான கோவில்களில் யானைகளை, வளர்ப்புப்ராணிகளாகவும், ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வளர்த்தனர்.

கல் யானைகளை உற்றுக்கவனித்தால் விசாலமான காதுடைய சாந்தமான அதன் முகமும், கம்பீரமான நீண்ட துதிக்கையும், பிரமாண்டமான உடலும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். காலில் சலங்கை, தந்தங்களில் பூண், பெரிய நெற்றியில் திருநாமம் அல்லது வீபுதி பொட்டு, முதுகின் மேல் பட்டாடை, கழுத்தில் மணி மேலும் சில பல அலங்காரங்களுடன் ஆனந்தமயமாய் காட்சியளிக்கும். அத்தகைய ஆனந்த ஸ்வரூபத்துடன் குதூகலமாய் நின்று கொண்டிருக்கும் யானை தன்னை கான்போரிடமும் தன் குதூகலத்தை பகிந்துக்கொள்ளும். இத்தனை மகிழிச்சி ததும்பும் கல் யானை சிற்பங்கள் அவ்வப்பொழுது உயிர் பெரும் நேரங்களை நீங்கள் கண்டதுண்டா?

யானையை கண்டு பிரமித்து, குதூகலித்து, கண்கள் விரிய அகமகிழ்ந்து சிரிக்காமல் ஒர் குழந்தை இருப்பதுன்டோ? குழந்தை மட்டும் ஏன்? யானையால் ஆட்கொள்ளப்படாத மனிதர்கள்தான் நம்மிடையே உண்டா? காலம் கழியும் போக்கில் யானைகளே உலகில் இல்லாமல் போகலாம். இதன் காரனமாகத்தான் அக்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்காவது நிலைத்திருக்கட்டும் என்று கல் யானை சிற்பங்களை கோவில்களில் செதுக்கி வைத்தார்களோ? ஓர் தொன்மையான கோவில் உங்கள் குல தெய்வத்தின் கோவிலாக இருக்கும் எனில், அக்கோவிலில் ஓர் கல் யானை சிற்பம் உள்ளதென்று வைத்துக்கொள்ளலாம். அதன் படி அந்த கல் யானை உங்கள் குடும்பத்தின் பல தலைமுறைகளை கண்டு இருக்கும். உங்கள் மூதாதையர்கள் தங்கள் சிறு பருவத்தில் ஏரி விளையாடிய அதே யானையின் மீது நீங்கள் ஏரி விளையாடி இருப்பீர்கள். நாளை உங்கள் வம்சத்தில் வரும் அனைத்துப்பிள்ளைகளும் அதனுடன் விளையாடுவார்கள். அப்படி பார்த்தால் வழி வழியாய் உங்களுடன் நட்பு கொண்ட அந்த யானை உங்கள் குடும்பத்தின் ஓர் இனைப்பிரியா அங்கம் ஆகின்றதல்லவா. யானையுடன் விளையாடுவதே ஓர் குதூகலமான அனுபவம்தான். அது நிஜ யானையானாலும் சரி கல் யானையானலும் சரி. யானை யானை தான், அதற்கு ஈடு இனையே கிடையாது.
குழந்தையின் சிரிப்பில் இறைவனை கானலாம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்! புல்லாங்குழலின் இன்ப கீதமும், யாழின் நளின இசையும்தான் இனிது என்பர் தம் குழந்தையின் சிரிப்பொலி கேளாதவர் என்று பொய்யா மொழிப்புலவர் பாடியதுபோல், மழலையின் சிரிப்பு மறையை விடவும் மேன்மையானது. கோவில்களில் குழந்தைகளின் மனம் அதிகம் லயிப்பது யானையிடந்தான்! நிஜ கோவில் யானை இருக்கும் பொழுதும், கல் யானை சிற்பங்களை குழந்தைகள் அதிகம் ரசிக்கின்றனர். காரனம், அவை எப்பொழுதும் இடம் பெயராமல் இருக்கும், அதன் மீது ஏரி விளையாடலாம், கட்டிக்கொள்ளலாம், ஏன் செல்லமாக அதனை அதிகாரமும் செய்யலாம். இவ்வளவு சௌகரியங்கள் உடைய கல் யானை குழந்தைகளுடன் மிக நெருங்கிய நட்புக்கொண்டு விடுகின்றது. சற்று வேறு கோணத்தில் யோசித்தால், ஓர் அதிசய உன்மை புலப்படும். குழந்தையின் சிரிப்பில் இறையை உனரலாம். குழந்தைகள் யானைகளை கண்டால் மெய் மறந்து சிரிக்கும். தற்பொழுது புரிகிறதா? கோவில்களில் யானைகள் வீற்றிருப்பதின் காரனம்!.

சற்று முன்னால் கல் யானை உயிர் பெருவதைப்பற்றி பேசினோம் அல்லவா? அந்த பேச்சை அங்கேயே விட்டு சிறிது தூரம் வந்துவிட்டோம்!. பரவாயில்லை, வாருங்கள் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். ஓர் வகையில் சொன்னால் கல் யானைகள் குழந்தைகளுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை. குழந்தைகள் அதனுடன் விளையாடும் ஒவ்வொரு கனத்திலும் கல் யானைகள் உயிர்த்தெழுகின்றன, தான் படைக்கப்பட்ட பயனை அவை அனுபவிக்கின்றன. அத்தகைய உயிருணர்ச்சியுடன் அவை பரிமாரும் அன்பினை குழந்தைகளும் புரிந்து கொள்கின்றனர். ஓர் ஆயுட்காலம் நீடிக்கும் பந்தமும் உருவாகின்றது. நீர்வீழ்ச்சி கொட்டுமிடத்தில் உள்ள பாறையின் வழுவழுப்பைப்போல அந்த பந்தமும் நாம் வளர வளர நம்முடன் வளர்கின்றது. அடுத்த முறை ஏதாவது ஓர் கோவிலில் கல் யானையை பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும்பொழுது கவனியுங்கள், உங்களிடையே பலமான பினைப்பு ஒன்று வளர்ந்துக்கொண்டிருப்பதை உனர்வீர்கள். அதே நேரத்தில் இந்த பாசப்பினைப்புதான் கால ஒட்டத்தினை வென்று யானைகளை இவ்வுலகிலே நிலைத்திருக்கச்செய்யும்.

"ஆனி" என்று உளமகிழ்ந்து கூப்பிடும் மழலையின் குரல் கேட்டு உயிர்பெரா கல் யானையும் இங்கே உண்டா?

****************

1 கருத்து:

  1. Ram,

    Wow, Its an amazing article!!! You know what? My son Nithin is so very eager to goto temple just to see "yaanai"!!! Even we, the grown ups have a great affinity towards the kovil yaanais :-)

    I simply loved this one..please keep writing..you have a wonderful skill...keep it up..

    Regards
    Shriram

    பதிலளிநீக்கு